25 Oct 2010
உன்னதமான உறவுகள்
மின்னஞ்சல்: 1
ஒரு இளம்பெண்ணின் நினைவலையில்,
நான் சின்னப் பெண்ணாக இருக்கும் போது எனது அம்மா இரவு உணவுக்காக எப்போதும் காலை நேரம் செய்யப்படும் எளிய உணவுகளையே சமைப்பாள். அன்றொரு இரவு மிக கடுமையான பல வேலைகளுக்கு பிறகு இதேபோல் ஒரு காலை உணவை தயார் செய்தாள். அன்றைய இரவு உணவாக முட்டையுடன் கொஞ்சம் அதிகமாக வறுக்கப்பட்ட ரொட்டியை அப்பாவுக்காக வைத்திருந்தார். என் தந்தை கோவப்படுவாரோ என்று நான் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
ஆனால், என் தந்தை என்ன செய்தாரென்றால் அம்மாவைப் பார்த்து புன்னகைத்து விட்டு, எனது அன்றைய நாளின் பள்ளி அனுபவத்தைக் கேட்டுக் கொண்டே சாப்பிடத் தொடங்கினார். நான் அவரிடம் என்ன சொன்னேன் என்பது சரியாக ஞாபகம் இல்லை. ஆனால், அவர் ஜாம் தடவிக்கொண்டே அந்த ரொட்டியை சாப்பிட்டது மட்டும் நன்றாக நினைவில் உள்ளது. நான் அந்த இடத்தைவிட்டு செல்லும் போது என் அம்மா ரொட்டி தீய்ந்து போனதற்காக அப்பாவிடம் மன்னிப்பு கேட்டது காதில் விழுந்தது. "அதனாலென்ன, எனக்கு அதிகமாக வறுபட்ட ரொட்டி ரொம்ப பிடிக்கும்" என்று அப்பா சொன்னதை என்னால் மறக்கவே முடியாது.
அன்றிரவு படுக்கையில் அப்பாவின் மேல் அமர்ந்து கொண்டு, உண்மையிலேயே உங்களுக்கு தீய்ந்து போன ரொட்டி பிடிக்குமா என்று கேட்டேன். என்னை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டே சொன்னார், "நாள் முழுவதும் செய்த கடின வேலைகளால் உன் அம்மா மிகவும் களைப்பாக இருந்தாள். மேலும் ரொட்டி கொஞ்சம் தீய்ந்து போனால் ஒன்றும் குறைத்து விடாது". உனக்கு ஒரு விசயம் தெரியுமா, "வாழ்க்கையில் எல்லாமே ஒழுங்கில்லாத பொருள்கள், ஒழுங்கில்லாத மனிதர்கள் தான்..".
இதுவரையில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், மற்றவர்களின் தவறை ஏற்றுக் கொள்வதுதான். அடுத்தவர்களை மாற்றுக்கருத்தை ஏற்றுக் கொள்ளவோ பாராட்டவோ செய்வது உறவுகளை பலப்படுத்த வளர்க்க உதவும். காய்ந்த ரொட்டி உறவுக்கு ஒரு பெரிய தடைக்கல்லாக அமைந்து விடாது. உறவுகளை சரியாக புரிந்து கொள்வதே கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தை நெருக்கத்தை, நட்பை உருவாக்கும்.
உங்களது மகிழ்ச்சியின் திறவுகோலை அடுத்தவர் கையில் கொடுக்காதீர்கள். அது உங்களிடமே இருக்கட்டும். உங்களை சுற்றி உள்ளவர்கள் எப்போதும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை மறந்து விடுவார்கள், நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதையும் மறந்து விடுவார்கள். ஆனால், உங்களால் உணரப்பட்ட ஒன்றை என்றும் மறக்க முடியாது.
மின்னஞ்சல்: 2
ஒரு கணவன், மனைவி ஜெருசலம் சுற்றுலா சென்ற போது எதிர்பாரா விதமாக மனைவி இறந்து விட்டார். மனைவி உடலை ஊருக்கு கொண்டுசெல்ல 50000 ரூபாயும், அங்கேயே சடங்குகளை முடிக்க 1500 ரூபாயும் செலவாகும் என்று அறிந்த கணவர் ஊருக்கே கொண்டுசெல்ல முடிவு செய்தார். எதற்காக தேவையில்லாமல் 50000 ரூபாய் செலவு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்னார். "ரொம்ப நாள் முன்பு ஜீசுஸ் கிறிஸ்ட் என்பவர் இங்கே இறந்து, அவரது உடலை எரித்து மூன்று நாட்களுக்கு பிறகு உயிர் பிழைத்து விட்டாராம். நான் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை..!!".
16 Sept 2010
கோப்பையா? காபியா?
நல்ல வேலை கிடைத்து வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்திருந்த மாணவர்கள் சிலர் தங்களது கல்லூரி பேராசிரியரைச் சந்தித்தனர். பழைய கதைகளைப் பேசிக் கொண்டுருந்த அவர்களின் பேச்சு தங்கள் சார்ந்திருந்த வேலையினால் உண்டாகும் மன அழுத்தத்தையும் அதனால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சலிப்பையும் பற்றி திரும்பியது.
விருந்தினர்களை உபசரிக்க காபி எடுத்துவரச் சென்றார் பேராசிரியர். ஒரு பெரிய பாத்திரத்தில் காபியும் சில கோப்பைகளையும் எடுத்துவந்தார். அதில் கிளாஸ், பிளாஸ்டிக், கிரிஸ்டல், விலையுயர்ந்த, சாதாரணமான, வெள்ளி மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட கோப்பைகள் கலந்து கிடந்தன. ஆளுக்கொரு கோப்பையில் காபியை அவர்களே எடுத்துக்கொள்ளுமாறு பேராசிரியர் பணிந்தார்.
மாணவர்கள் காபியுடன் அமர்ந்ததும், பேராசிரியர் பேச ஆரம்பித்தார்.
நன்றாக கவனித்தீர்களானால், விலையுயர்ந்த மற்றும் பார்வைக்கு அழகான கோப்பைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ளவை சாதாரண மலிவாக கிடைக்கக் கூடிய கோப்பைகள் மட்டுமே. இந்த மனநிலைதான் உங்களின் அனைத்து துன்பம் மற்றும் மன அழுத்ததிற்கு காரணம். உண்மையிலேயே உங்களுக்கு தேவை கோப்பையா? அல்லது காபியா? ஆனால் நீங்கள் அனைவரும் மற்றவர்களின் கோப்பையை விட உங்களது கோப்பை நன்றாக இருக்கவேண்டுமென்று தான் நினைத்தீர்கள்.
இங்கே வாழ்க்கையை காபியாக கருதினால், வேலை, பணம், அந்தஸ்து ஆகியவை கோப்பைகளைப் போன்றது. அந்த கோப்பைகளெல்லாம் உங்களது வாழ்க்கையை தூக்கி பிடிக்கும். ஆனால் வாழ்க்கை மாறாமல் அப்படியேதான் இருக்கும். கோப்பையை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தால் சிலசமயம் வாழ்க்கையை இழக்க நேரிடும்.
காபி அருந்த கோப்பை அவசியம்தான். அது எந்த கோப்பை என்பது, அவரவர் மனநிலையில் உள்ளது. கோப்பையை தேடி அலையாமல், காபியை மகிழ்வாக அருந்துங்கள்.
நமது கோப்பையை நாம்தான் முடிவு செய்யவேண்டும்.
27 Aug 2010
அய்யா கொஞ்சம் தண்ணி குடுங்கையா..??
சங்கவி சொல்லுறது எல்லாம் சரிதான். உங்களுக்கு என்ன(பவானி) இந்தப் பக்கம் காவேரி, அந்தப் பக்கம் பவானினு ஓடுது. கோபில கூட LBP ஓடுது. பொள்ளாச்சி, உடுமலைப் பக்கம் சொல்லவே வேணாம். திருப்பூர்ல நொய்யல் இருந்துச்சு, அதுவும் இப்போ நோயால் வாடுது. ஆனா எங்க நிலமைய யோசிச்சு பார்த்திங்களா..?
திருப்பூருக்கு வடக்க, குன்னத்தூர், கொளப்பலூர் தாண்டி கோபிக்கு ஏழு கிலோமீட்டர் முன்னாடி வரைக்கும் வானம் பார்த்த பூமிதான். அதே மாதிரி மேக்க புளியம்பட்டில இருந்து நம்பியூர், செவியூர், திங்களூர் வரைக்கும் இதே நிலைமைதான். இத்தனைக்கும் வடக்கத்துக்காரங்கள(தோள்ல பச்ச துண்ட போட்டுக்கிட்டு டீஸல் புல்லட் ஒட்டுறதுதான் அவங்க வேல) விட நாங்க கடுமையான உழைப்பாளிகள் தான்.
நாங்களும் விடாம பதினஞ்சு இருபது வருசமா அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக நடையா நடக்கிறோம். ஆனா அறிவிப்பு மட்டும் வருது செயல்ல ஒன்னையும் காணோம். இதோ இப்போ கூட செம்மொழி மாநாட்டுல அறிவிப்பாங்கனு வாய தொறந்து பார்த்துட்டு இருந்ததுதான் மிச்சம்.
இத்தனைக்கும் நாங்க ஒன்னும் புது வாய்க்காலோ, ஆத்த திருப்பி விடச் சொல்லியோ கேட்கல. இருக்குற பள்ள வாரியத்த தூர் வாரி குளம் குட்டைகளுக்கு தண்ணி விட்டா மட்டும் போதும். கிணறு, போர்வெல் எல்லாம் பதம் புடிச்சுக்கும். இப்போ 1500 அடில கூட தண்ணி இருக்காது போல. போன மாசம் எங்க பக்கத்து தோட்டத்துல 1300 ல ஒன்னு 1400 ல ஒண்ணுனு ரண்டு போர் போட்டு அஞ்சு லட்ச ரூபா போனது தான் மிச்சம். இத்தன வருஷம் கழிச்சு மஞ்சள் நல்ல விலைக்கு வித்து, அந்த காச கொண்டு போயி குழில போட்டாச்சு. இதுக்கு மேல என்ன பண்ண?
இந்த கருமத்த நம்பி ஒன்னும் பண்ண முடியாதுன்னு பாதி பேரு திருப்பூர் கம்பனிக்காரங்களுக்கு காட்ட வித்து போட்டு அதே கம்பனில கூலி வேலைக்கு போயிட்டு இருக்காங்க. சொன்ன நம்ப மாட்டிங்க, எங்க பங்காளி ஒருத்தரு தோட்டத்த வித்து போட்டு என்ன பண்ணறதுன்னு சொல்லிட்டு கம்பெனிக்கு விக்காம அதுல விவசாயம் பார்த்தாரு. ஒரே வருசத்துல கெணரும் காஞ்சு, குழியும் வத்திப் போச்சு. இப்போ அதே கம்பெனிக்கு கணக்கு எழுத போறாரு(நல்ல வேல பி.யு.சி. வரைக்கும் படிச்சு இருந்தாரு)
விவசாயம் பண்ணி பொழச்சுக்கலாம்னு படிக்காம, இந்த காட்டையே நம்பினவுங்க எல்லாம் வேற வழியே இல்லாம கூலி வேலைக்குதான் போயிட்டு இருக்காங்க. இலவச மின்சாரம் வாங்குற போராட்டத்துல மூணு பேரு செத்து போனாங்களே(இப்போ அரசியல் பண்ணுறதுக்கு உதவுறாங்க) ஞாபகம் இருக்கா? அதுல ஒருத்தரு எனக்கு தாத்தா முறை. அவரோட தோட்டமும் இந்த காஞ்சு போன பகுதிக்குள்ள தான் வருது. அவருக்கு(மத்த ரண்டு பேருக்கும் தான்) நன்றி செலுத்த வேண்டியாவது இந்த அவினாசி - அத்திக்கடவு திட்டத்த நிறைவேத்தலாம்.
ஆனா அவங்க இறந்த நாள் அன்னைக்கு பெருமானல்லூர்ல பெருசா ஒரு ப்ளெக்ஸ் வெச்சு அதுல சிறுசா அவங்க போட்டோவும், பேரும் மட்டும்(மத்ததெல்லாம் என்னான்னு கேட்கறிங்களா..??) இந்த ரண்டு வருசமா வெக்கறாங்க. கேட்டா கொங்கு நாட்ட தூக்கி நிறுத்தப் போறேன்னு சொல்றாங்க..??
இப்படி விவசாயம் பண்ண திறமை இருந்தும், ஆர்வம் இருந்தும் வேற வழி இல்லாம(ஆனா, வலி இருக்கு..) திருப்பூர் கம்பெனிக்கும், வீட்டு மனைக்கும் காடு தோட்டத்த வித்துட்டு இருக்கோம். இதுவரைக்கும் யாராவது எங்களுக்காக கவலைப்பட்டு இருக்கிங்களா?? ஆனா, நாங்க காட்ட வித்து போடறோம்னு மட்டும் வருத்தப்படுறிங்க. எங்களுக்கான வசதிகள் இருந்தும் நாங்க விவசாயம் செய்ய மறுத்தா, செருப்ப கழட்டி அடிங்க. ஆனா ஒண்ணுமே இல்லாம வெறும் கைல மொழம் போட எங்களால முடியாதுங்க.
12 Aug 2010
யாருக்காவது ராமாயணம் தெரியுமா..??
ஒரு முனிவர் ஒருத்தரு வழில போயிட்டு இருக்கும்போது, எதுக்கால இன்னொரு முனிவரு கால இழுத்துகிட்டே வந்தாராம். ஏப்பா என்ன ஆச்சுன்னு இவரு கேட்க,
"முக்காலைகொண்டு மூவிரண்டைக் கடக்கயிலே ஐந்து தலை நாகமொன்று ஆளக் கடந்ததுவே.." அப்படின்னாராம்.
அதுக்கு இவரு,
"பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலை வாங்கித் தேய்.." அப்படின்னு சொன்னாராம்.
இதுக்கு என்ன விளக்கம்னா..??
முதலாமவர்: வயதாகிவிட்டதால் கையில் குச்சியுடன் ஆற்றைக் கடந்து வரும்போது நெருஞ்சி முள் ஒன்று காலில் குத்தி விட்டதாம்..
இரண்டாமவர்:
பத்து தரன் - தசரதன்
புத்திரன் - மகன் (ராமன்)
மித்திரனின் - நண்பன்(ராமனின் நண்பன் சுக்ரீவன்)
சத்துருவின் - எதிரி(சுக்ரீவனின் எதிரி வாலி)
பத்தினியின் - மனைவி(வாலியின் மனைவி தாரை)
தாரைல காலை வாங்கினா தரை (ஸ்ஸ்ஸ்ஸப்பா....)
ஒன்னுமில்லைங்க தரைல காலத் தேய்னு சொல்லுறாரு..
இத எழுதும்போது ராமனின் நண்பன் சுக்ரீவனா? வாலியா? னு சந்தேகம் வந்துச்சு. சரின்னு கூகுள்ல தேடித் பார்த்தா, ஏற்கனவே ஒரு நண்பர் இங்க இதப் பத்தி இடுகை போட்டு இருக்கார். இருந்தாலும் நாம முன்ன வெச்ச கால பின்னாடி வெக்கக் கூடாதுன்னு நானும் இந்த இடுகைய போட்டுட்டேன்..
11 Aug 2010
அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா தேவையா(ஒரு கண்ணீர் கதை)..??
ஒரு வெள்ளிக்கிழமை என்னோட கணினியை நிறுத்திட்டு போன நான், திங்கள்கிழமை வந்து பட்டன அமுக்கினா, குய் குய் னு மூணு சத்தம் வந்துச்சு. நானும் நாலஞ்சு தடவ முயற்சி செஞ்சு பார்த்துட்டு, பழுது நீக்குரவங்களுக்கு தகவல் சொன்னேன். ஒருத்தர் வந்து பார்த்துட்டு இது மென்பொருள் பிரச்சினை இல்ல, வன்பொருள் சரி செய்யுறவர கூப்பிட்டு கேளுங்கன்னு சொன்னாரு. அவரு வந்து பார்த்துட்டு தம்பி RAM எங்கப்பான்னு கேட்டாரு.. "இந்திராகாந்திய சுட்டுட்டாங்களாங்கற" ரேஞ்சுக்கு என்னது RAM அ காணோமான்னு கேட்டேன்.
ஆமாப்பா ன்னு சொன்னாரு. சரி நான் இப்போ என்னங்க பண்ணனும்னு கேட்டதுக்கு, ஸ்டோர்ல போயி கேளுப்பான்னு சொன்னாரு. அங்க போயி கேட்டா, இது ஸ்டோர் மட்டும்தான். நாங்க RAM எல்லாம் தரமாட்டோம். Access Control க்கும், செக்யூரிட்டிக்கும் சொல்லிட்டு உங்க மேனேஜருக்கு ஒரு மெயில் அனுப்புனு பதில் வந்துச்சு. அவருக்கு மெயில் அனுப்பினா, செக்யூரிட்டி கிட்ட இருந்து ஒரு மெயில் வாங்கி அனுப்ப சொன்னாரு.
எல்லாம் மெய்லும் அனுப்பி அவரு கம்பெனி கிட்ட RAM கேட்டு ஒரு விண்ணப்பம் போட்டாரு. அதுக்கு அந்த தம்பி கிட்ட ரண்டு கம்ப்யூட்டர் இருக்கு, அதுல ஒன்ன ஸ்டோர்ல திருப்பி தரச் சொல்லுங்கன்னு ஒரு பதில் வந்துது. ஒரு கம்ப்யூட்டர்க்கே வேலைய காணோமாம்னு நினச்சுட்டு இருங்க பார்த்து சொல்லறேன்னு சொன்னேன்.
அப்புறம் பார்த்தா அத நான் திருப்பி கொடுத்து ஒரு வருசத்துக்கும் மேல ஆகி இருந்தது. அய்யா அத நான் திருப்பி கொடுத்து ஒரு வருசமாச்சுன்னு சொல்லி, அங்க இங்க பேசி ஒருவழியா புது RAM வாங்கறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்குதே, அத சொல்லி மாள முடியாதுங்க.
இப்போ விசயத்துக்கு வர்றேன். கண்காணிப்பு கேமரா இருந்துருந்தா, செக்யூரிட்டியோட என்னோட வேலை முடிஞ்சுருக்கும். இத்தன துன்பம் இருந்துருக்காது. இத்தன துன்பத்துலயும் ஒரு மகிழ்ச்சி என்னன்னா எப்படியோ ஒரு இடுகை தேத்தியாச்சு. :-))
28 Jul 2010
சவாலை சமாளிக்க..
கல்லூரி பேராசிரியர் ஒருவரது வகுப்பில்,
வாழ்க்கையில் உள்ள தடைகளையும், பிரச்சனைகளையும் சிந்திப்பது மிகவும் அவசியம். ஆனால், அதைவிட முக்கியமானது நாள் முடிவில் தூங்கச் செல்லும் முன் அவற்றை தூக்கி எறிவது.
27 May 2010
சும்மா தத்துவம் ஹி..ஹி..
2. ஒருவரின் எண்ணங்களை மாற்ற சிறந்த வழி நமது எண்ணத்தை மாற்றிக்கொள்வது தான். ஒரே சூரியன்தான் வெண்ணையை உருக்கவும் களிமண்ணை கடினமாக்கவும் செய்கிறது.
3. வாழ்க்கை கடல் போன்றது. எல்லை இல்லாமல் போகிறது. எதுவும் நிலைப்பதில்லை. அலையைப்போல் நம் மனதை தொடும் ஒரு சிலரின் நினைவுகள் மட்டும் நம்மோடு.
4. என்றாவது நீங்கள் எவ்வளவு வசதியானவர் என்று தெரிந்து கொள்ள விரும்பினால், உங்களிடம் உள்ள பணத்தை எண்ணாதீர்கள். கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் விடுங்கள், எத்தனை கைகள் அதை துடைக்கிறதோ அதுதான் உங்களது உண்மையான வசதி.
5. இதயம் கண்களிடம் சொல்லுகிறது, குறைவாகப் பார் உன்னால் நான் அதிகமாக காயப் படுகிறேன் என்று. அதற்கு கண்களோ, நீ குறைவாக உணர்ச்சிவசப்படு அதனால் நான் தான் அதிகம் கண்ணீர் வடிக்கிறேன் என்கிறது.
6. மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள். ஏனென்றால் உங்களைத் தவிர வேறு யாரும் உங்களைப்போல் வாழ முடியாது. நீங்கள் என்னவாக உள்ளீர்களோ அதுதான் சிறந்தது.
7. புதிதாக பறந்து பழகிய கொசு திரும்பியவுடன் அம்மா கொசு கேட்டது. "இன்றைய நாள் எப்படி இருந்தது?". பதில் "அருமையான நாள் இது, ஒவ்வொருவரும் எனக்காக கை தட்டினார்கள்..!!".
30 Apr 2010
ஒத்த விட்டம்
சரி பொது கணினிக்கு(Common system) போயி படிக்கலாம்னா, குழும மின்னஞ்சல படிக்கவே ஒரு மணி நேரமாகுது. மக்களோட இடுகைய சரியா படிக்க முடியல, பின்னூட்டம் போட முடியலன்னு மனசே சரி இல்லீங்க. மாசக் கடைசி ஆக ஆக இடுகை போட முடியாம பயித்தியம் புடிக்கற மாதிரி ஆகிப்போச்சுங்க.
நேத்திக்கு தேதிய பார்த்தா 29 னு இருக்கு. அப்படியே பகீர்னு ஆகிப்போச்சு. தொடர்வண்டிபாதைலையும்(ரயில்.. வே..ங்க) புதுசா எந்த சிறப்பு வண்டியும் விடல. இடுகை போடுற மாதிரி எந்த முன்னனுப்பப்பட்ட(ஹி.. ஹி.. forward ) மின்னஞ்சலும் இல்ல. சேரி பழைய மின்னஞ்சல் எதாவது தேறும்னு பார்த்தா, குழுமத்துல இருந்து வந்தது மட்டும்தான் கண்ணுக்கு தெரியுது.
அதுல ஒரு மின்னஞ்சல்ல வாரம் ஒரு இடுகை போட்டவங்களத்தான் ரவுடின்னு ஒத்துக்குவாங்கன்னு யாரோ சொல்லி இருந்தாங்க. என்னடா இது வம்பா போச்சு, நாம ரவுடின்னு குழும விழாவுல எல்லாம் ஒத்துட்டாங்களே, இப்போ திடீர்னு இப்படி ஒரு குண்ட தூக்கி போடறாங்கன்னு, வரைவுல இருந்தத எல்லாம் தூசி தட்டி நேத்து ஒரு இடுகை போட்டாச்சு.
ஒத்த விட்டம் ஆகாதுன்னு ஊருக்குள்ள சொல்லுவாங்கலேன்னு நேத்து பொழுதோட சரியா தூக்கமே வல்லீங்க. அதுதான் இன்னைக்கு அவசர அவசரமா இந்த இடுகை. அப்பாடா இந்த மாசக் கணக்குக்கு ரண்டு இடுகை ஆச்சு. இன்னைக்காவது நிம்மதியா தூக்கம் வருதான்னு பார்க்கலாம்.
பின் குறிப்பு: என்னை மன்னிச்சுருங்க. வேற வழி தெரியல.
29 Apr 2010
ஒரு வரித் துணுக்குகள்(சிரிக்க மட்டும்)
Ø நேரம் தவறாமையில் உள்ள சிக்கல் என்னவென்றால், உங்களைப் பாராட்ட அங்கு யாரும் இருப்பதில்லை.
Ø நான் போதை வேண்டாமென்று சொன்னேன், ஆனால் அது என் பேச்சை கேட்பதாயில்லை.
Ø நான் எப்போதும் குடிக்க நினைப்பதில்லை, ஆனால் அது அடிக்கடி வழங்கப்பட்டு விடுகிறது.
Ø வெற்றிக்கான பாதை எப்போதும் வேலை முடிவடையாமலே இருக்கிறது.
Ø திருமணம் என்பதே விவாகரத்தின் முதன்மையான காரணமாக இருக்கிறது.
Ø உங்களுக்கு தேவைப்படும் எல்லாமே கிடைத்தால் நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்குறீர்கள்.
Ø உலகின் முதல் சக்கரத்தை கண்டுபிடித்தவன் முட்டாள், மற்ற மூன்று சக்கரங்களை கண்டுபிடித்தவனே சிறந்த அறிவாளி.
Ø நமது சமூகத்தில் பேச்சு சுதந்திரம் உள்ளதென்றால் தொலைபேசி கட்டணம் எதற்கு?
Ø வானத்தில் 3௦௦ கோடி நட்சத்திரங்கள் உள்ளதென்றால் நம்பும் ஒருவன், பூங்கா பெஞ்ச் புதிதாக சாயம் பூசப்பட்டுள்ளது என்றால் தொட்டு பார்க்கிறான்.
Ø பட்டாளத்தில் சேர், உலகத்தை பார், புதுமையான மனிதர்களை சந்தித்து அவர்களைக் கொல்.
Ø எனது 13 வயது வரை என் பெயர் 'வாயை மூடு' என்று நினைத்திருந்தேன்.
Ø உங்களால் ஒரு விஷயத்தை புரியவைக்க முடியவில்லை என்றால், குழப்பிவிட்டு விடுங்கள்.
28 Mar 2010
பெங்களூரிலிருந்து சிறப்பு ரயில்கள்
ரயில் எண்: 0651
எர்ணாகுளத்தில் புறப்படும் நேரம்: 18.50 (ஒவ்வொரு திங்கள் கிழமையும் ஏப்ரல் 5 முதல் ஜூன் 15 வரை)
ரயில் எண்: 0653
எர்ணாகுளத்தில் புறப்படும் நேரம்: 21.15 (ஒவ்வொரு வியாழக் கிழமையும் ஏப்ரல் 5 முதல் ஜூன் 15 வரை)
பெங்களுரு - எர்ணாகுளம்
ரயில் எண்: 0652
பெங்களூரில் புறப்படும் நேரம்: 17.15 (ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ஏப்ரல் 5 முதல் ஜூன் 15 வரை)
ரயில் எண்: 0654
பெங்களூரில் புறப்படும் நேரம்: 18.50 (ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஏப்ரல் 5 முதல் ஜூன் 15 வரை)
ரயில்கள் நின்று செல்லும் இடங்கள்: அலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திருபத்தூர், குப்பம், பங்காருபேட், Whitefield, கிருஷ்ணராஜபுரம் மற்றும் பெங்களுரு கண்ட்.
12 Mar 2010
வெயில், சிறுநீரக கல் மற்றும் கொத்தமல்லி

வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு. இனிமேல், சிலருக்கு தூங்கிகிட்டு இருந்த சிறுநீரக கல் பிரச்சினை தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடும்.
காலம்காலமா சிறுநீரகத்தோட வேலையே ரத்தத்தில் கலந்துருக்குற தேவையற்ற உப்புகளை நீக்கி அந்த உப்பை எல்லாம் சிறுநீர் வழியா வெளியேத்துறது தான். ஆனா இந்த வெயில் காலத்துல உடம்பில் இருக்குற நீரெல்லாம் வியர்வையாகவே ஆவியாகிடரதுனால உப்புகள் எல்லாம் சிறுநீரகத்துலயே தங்குறதுனால தான் கல் உருவாகுதாம். அதனால இனிமேல் எல்லோரும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதான் கெட்ட உப்பு எல்லாம் சிறுநீரோட வெளியேறும்.
அதோட சிறுநீரகத்த சுத்தமா வச்சுக்க எளிய செலவில் ஒரு இயற்கை வழி இருக்குதாம். ஒரு குத்து 'கொத்தமல்லி தழை' மற்றும் 'தனியா' எடுத்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீரை ஊற்றி பத்து நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் ஆறவைத்து வடிகட்டி சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி குளிர்பதன பெட்டியில் வைத்து, பிறகு குடிக்கவும்.
இதுபோல தினமும் ஒரு டம்ளர் அளவு இந்த ஆகாரத்தை குடித்து வந்தால் உடம்பிலுள்ள கெட்ட சத்துகள் மற்றும் தேவையற்ற உப்புகளனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். கொத்தமல்லி சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படுகிறது.
மேலும் இது இயற்கையாக விளையும் பொருள் என்பதால் வேறு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. முயற்சி செய்து பாருங்களேன்.
9 Mar 2010
நடுவணரசின் தில்லாலங்கடி..
அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?
அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.
உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.
இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?
இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.
இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.
இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?
நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.
இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?
5 Mar 2010
செல்பேசி எண் மாற்றத் தேவையில்லா வசதி (Mobile Number Portability)
இந்த மாதிரி ஒரு வசதி வருதுனு சொன்னவுடனே, ஆகா இனிமேல் செல்பேசி எண்ண மாத்தறதுக்கு பயந்துட்டு நல்ல வசதி கொடுக்கற சேவையாளருக்கு மாத்திக்க பயப்படத் தேவையில்லைன்னு நினைச்சோம். ஆனா, இப்போ அந்த வசதிய ஏதாவது ஒரு காரணம் சொல்லி தள்ளிப் போட்டுட்டே இருக்காங்க.
அநேகமாக கடந்த நடுவணரசில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இதுவென்று நினைக்கிறேன். முதல் தவணை நாளாக டிசம்பர் 31, 2009 அறிவிக்கப்பட்டது. பிறகு சேவை நிறுவனங்கள் உள்கட்டமைப்பு செய்ய கால அவகாசம் கேட்டன. பிறகு அரசு நிறுவனங்கள் BSNL மற்றும் MTNL உள்கட்டமைப்பு வேலை காரணமாக அது மீண்டும் மார்ச் 31, 2010 க்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
இப்போது இந்த சேவையை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றான "US-based Telcordia Technologies" பாதுகாப்பு வேலைகளை சரிவர செய்ய வேண்டும் என்பதற்காக மேலும் இரண்டு மாதங்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதாவது மே மாத இறுதியில் இது பயன்பாட்டுக்கு வரும் என்கிறார்கள்.(வருமா?)
இந்தியா முழுவதும் இந்த வசதிய அறிமுகப்படுத்த இரு நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கி இருக்காங்களாம். ஒன்னு"US-based Telcordia Technologies" இன்னொன்னு "Syniverse Technologies". அடுத்தது இவங்கனால ரண்டு மாசம் தள்ளிப்போடப் போறாங்களா?
என்னதான் நடக்குது அங்க..
24 Feb 2010
சச்சினின் புதிய உலக சாதனை

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் உலக சாதனை படைத்தார்.
1997 ல் சஹீத் அன்வர் எடுத்த 194 ஓட்டங்களே இதுவரை ஒரு நாள் போட்டிகளில் ஒரு வீரரின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. கிரிகெட் உலகின் ஜாம்பவான் என்று செல்லமாக அழைக்கப்படும் இந்திய வீரர் சச்சின் இன்று அந்த சாதனையை முறியடித்து தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியாவில் நடக்கும் ஒருநாள் ஆட்டத்தில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
வாழ்த்துகள் சச்சின்..
9 Feb 2010
கூகுளின் மற்றுமொரு தேடல் இயந்திரம்(நல்ல பயன்பாட்டுடன்..)
கூகிள் உதவியுடன் ஒரு புதிய தேடல் இயந்திரம் (Cocodle.com ) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேடல் இயந்திரத்தை நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் ஒரு குறிப்பிட தொகை, சமுதாயத்தில் பின்தங்கியுள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும்.
இந்த வலைத்தளத்தை உபயோகபடுத்தினால், கூகுளின் அதே துல்லியத்துடனும் முடிவுகள் இருக்குமென்று உறுதியளிக்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவாக இருந்தாலும், உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதிக அளவிலான உதவிகளை உலகம் முழுவதும் விரிவடையச்செய்யும்.
இந்த வலைத்தளத்தை வடிவமைப்பதில் நாங்கள் முனைப்பாக உள்ளோம் எனவும், அதன் மூலம் அக்குழந்தைகளுக்கு உதவ உபயோகிப்பாளர்களது உதவி மிகவும் தேவைப்படும் எனவும் கூறுகின்றனர். பண உதவியோ பொருள் உதவியோ எதிர்பாராமல் இந்த தேடல் இயந்திரத்தை மட்டும் நமது பயன்பாடுகளுக்காக உபயோகப்படுத்த சொல்லுகிறார்கள்.
இந்த அமைப்பின் முக்கிய செயல்பாடுகளாக பின்தங்கியுள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் உடல்நலத்தை மேம்படுத்துவதாக கூறுகின்றனர். இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவதன் மூலம் தங்களது சேவையை ஆரம்பம் செய்வதாக உள்ளனர்.இது தொடர்பான செயல்பாடுகளை தங்களது வலைப்பூவில் பதிவேற்றம் செய்யவுள்ளனர்.
இதுகுறித்தான ஆலோசனைகள் மற்றும் தொடர்புகளுக்கு, cocodle.support@gmail.com மற்றும் http://www.cocodle.com/en/contact.htm.
தமிழ்மணம் மற்றும் தமிழிஷில் வாக்களித்து அதிக மக்களை சென்றடையச்செய்யுங்கள்..
5 Feb 2010
இலவச பிளாஸ்டிக் சர்ஜரி
தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொடைக்கானல் பாசம் மருத்துவமனையில் வருகின்ற 2010, மார்ச் 23 முதல் ஏப்ரல் 4 ம் தேதி வரை ஜெர்மன் மருத்துவர்களால் இலவச பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படுகிறது.
தீக்காயம் பட்டவர்களோ, பிறப்பால் பிரச்னைக்கு உள்ளானவர்களோ மேலும் காது, மூக்கு மற்றும் வாய் போன்றவை ஒட்டி இருப்பதால் பிரச்னைக்கு உள்ளானவர்களோ இங்கு இலவசமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள:
M.M. வீதி, கொடைக்கானல் என்ற முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது (04542) 240778 மற்றும் 240668 தொலைபேசி எண்களில் அழைத்தோ பதிவு செய்துகொள்ளலாம்.
அல்லது pasam.vision@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
4 Feb 2010
கோவை நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
இன்று (04-02-2010)முதல் முன்பதிவு தொடங்குகிறது.
ரயில்களின் விவரம்:
1. சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் – சென்னை சென்ட்ரல்
ரயில் எண்: 0621 சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் 22.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். இந்த ரயில் 5.2.2010 முதல் 26.3.2010 வரை அனைத்து வெள்ளிகிழமைகளிலும் ஓடும்.
ரயில் எண்: 0622 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் 23.55 மணிக்கு கோயம்பத்தூரில் இருந்து புறப்படும். இந்த ரயில் 7.2.2010 முதல் 28.3.2010 வரை அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் ஓடும்.
இந்த ரெயிலில் 2 முதல் வகுப்பு, 1 மூன்றாம் வகுப்பு (குளிர்சாதன வசதி), 8 இரண்டாம் வகுப்பு படுக்கை, 4 பொது வகுப்பு பெட்டிகள் உள்ளன.
ரயில் நின்று செல்லும் இடங்கள்: காட்பாடி, ஜோலார்பேட்டை , சேலம், ஈரோடு, மற்றும் திருப்பூர்.
2. சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல்
ரயில் எண்: 0601 சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் 20.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். இந்த ரயில் 5.2.2010 முதல் 26.3.2010 வரை அனைத்து வெள்ளிகிழமைகளிலும் ஓடும்.
ரயில் எண்: 0602 நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் 16.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும். இந்த ரயில் 6.2.2010 முதல் 27.3.2010 வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் ஓடும்.
இந்த ரயிலில் 2 இரண்டாம் வகுப்பு (குளிர்சாதன வசதி), 2 மூன்றாம் வகுப்பு (குளிர்சாதன வசதி), 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் உள்ளன.
ரயில் நின்று செல்லும் இடங்கள்: காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர்.
2 Feb 2010
புதிய ரயில் முன் பதிவு வலைப்பக்கம்

பிறகு வழக்கம் போல பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து நமது கணக்கிற்குள் சென்றால் புதிய பக்கம் திறக்கிறது. அதில் புறப்படும் இடம், சேரும் இடம் பயண நாள் போன்ற விபரங்களை கொடுத்தால் அன்றைய நாளுக்கான ரயில்களின் பட்டியலை கொடுக்கிறது. மேலும் குறிப்பிட்ட ரயிலில் எந்த வகுப்பு வசதி உள்ளது என்பதையும் காட்டுகிறது.

தேவையான ரயிலின் விருப்பமான வகுப்பை சுட்டினால் அடுத்த ஆறு நாட்களுக்கான இருப்பு விபரத்தையும், பயணத் தொகையையும் காட்டுகிறது. அதில் உள்ள "Book link" ஐ சுட்டி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
புதிய வசதியை உபயோகித்து எளிதாக முன்பதிவு செய்யுங்கள்.
22 Jan 2010
படித்த கவிதை
இதை எழுதியது யாரென்று தெரியவில்லை..
அந்தரத்தில் ஒரு உப்பரிகை
அதில் ஒரு சொப்பனத்து சுந்தரி
நேர் கீழே பொருத்திப்பார்க்க இரு மல்லர்கள்
நெருங்கி வந்தார்
கிசுகிசுத்தார்
நீசமகள் ஞானமில்லா வெற்றலகுப் பிண்டம்
இதைப் பெற்றுவிட போரிடவா என்றார்
விட்டுவிடு என்றார்
விலகி நின்றார்
உப்பரிகை நிலா உள்முற்றம் போயிற்று.
20 Jan 2010
அமில மழை அபாயம்
சமீபத்தில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் காரணமாக அமில மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்(யாரு?).
சனவரி 20 முதல் 28 ஆம் வரை பெய்யும் மழையில் நனைவதால் நமது தோலுக்கு ஆபத்து ஏற்படுவதாகவும், அதனால் மழையில் நனைவதை தவிர்க்க வேண்டியும் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.
ஆகவே நண்பர்களே, இந்த வாரம் மழையில் நனைவதை தவிர்த்து விடுங்கள்.
இது ஒரு தவறான தகவல் என்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.
14 Jan 2010
ஆனந்த விகடன் விலை 100 ரூபாய்

இரு வாரங்களுக்கு முன் எனது நண்பர் ஆனந்த விகடன் வாங்க கோபி சென்றுள்ளார். அது அவர் வழக்கமாக புத்தகம் வாங்கும் கடைதான். 15 ரூபாய் கொடுத்து புத்தகம் கேட்டபோது கடைக்காரரோ இந்த வார இதழ் 100 ரூபாய் என்று சொல்லியுள்ளார். ஏனென்று கேட்டதற்கு ஏர்செல் சிம் இலவசம் அதனால் தான் என்று சொல்லியிருக்குறார்.
இவரோ புத்தகத்தில் 15 ரூபாய் தானே போட்டுருக்கு என்று கேட்டதற்கு, அதெல்லாம் தெரியாது 100 ரூபாய் தான் என்றுள்ளார். சரி எனக்கு சிம் வேணாம் புத்தகம் மட்டும் கொடுங்க போதும் என்று கேட்டதற்கு, அப்படியெல்லாம் தரமுடியாது என்று கடைக்காரர் சொல்ல இவர் ஆனந்தவிகடன் அலுவலகதிற்கு போன் செய்துள்ளார். ஆனால் அங்கு யாரும் போனை எடுக்கவில்லை.
வீட்டிக்கு வந்து மீண்டும் போன் செய்துள்ளார், அப்போது பேசிய ஒருவர் இவரிடம் என்ன விசயம் என்று கேட்டுவிட்டு, நாங்கள் புத்தகத்திற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று கூறியுள்ளார். சரி கடைக்காரர் மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என்று கேட்க, அவரை நாங்கள் எதுவும் செய்ய முடியாது, கேட்டால் நான் வேறு கடையில் இருந்து வாங்கி வந்து விற்கிறேன் என்பார் என்று சொல்லிவிட்டு நண்பரின் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார்களாம்.
சிறுது நேரம் கழித்து கோபி பகுதி முகவர் போன் செய்து தனக்காக வைத்திருக்கும் புத்தகத்தை தருவதாக கூறியுள்ளார். அவரும் புத்தகம் மட்டும் வேண்டுமா இல்லை சிம் கார்டும் வேண்டுமா என்று கேட்டுள்ளார். ஆனந்த விகடன் புத்தகத்துடன் வரும் எல்லாமே வேண்டும் என்று சொல்லி இவரும் வாங்கி வந்துள்ளார்.
யாரிடம் சொன்னால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று தெரியாமல் என்னிடம் புலம்பினார். அந்த வாரம் நான் சிம் கார்டு மற்றும் அந்த சின்ன இணைப்பு புத்தகம் இல்லாமல் ஆனந்த விகடன் வாங்கியதை அவரிடம் நான் சொல்லவில்லை.
13 Jan 2010
பொங்கல் வாழ்த்து

விவசாயம் மறந்து
வெள்ளாமை தொலைந்து
விளைநிலம் வீட்டு மனையாகிய
இந்த பொன்னாளில்
நானும் சொல்லிக்கொள்கிறேன்
இனிய பொங்கல் நல்வாழ்த்'துக்க'ள்..
11 Jan 2010
இன்றைய தமிழகம்
தமிழகத்தின் இன்றைய நிலையையும், இதே நிலை நீடித்தால் ஏற்படப்போகும் விபரீதங்களையும் உரைக்கும் வகையில் எனக்கு பகிரப்பட்ட ஒரு மின்னஞ்சல் கீழே...
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் - எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?
நான் கேட்டேன் கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?
அவர் சிரித்தபடி சொன்னார் - என்னைப் பார்
1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு உறங்கிடுவேன்,
போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்,
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?
முதலாமவர் சிரித்தபடி கேட்டார் - நான் யார் தெரியுமா?
தமிழ் நாட்டுக் குடிமகன்
நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்,
சமைப்பதற்கு கேஸும் அடுப்பும் இலவசம்,
பொழுது போக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம்,
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்,
எதற்காக உழைக்க வேண்டும்?
நான் கேட்டேன் - உன் எதிர் கால சந்ததியின் நிலை என்ன?
பலமாக சிரித்தபடி உரைத்தார்,
மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 சிகிச்சையுடன் இலவசம்,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன், மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்,
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்,
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ரூபாய் 25000 இலவசம்,
1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,
மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,
நான் எதற்கு உழைக்க வேண்டும்!!
வியந்து போனேன் நான்,
ஏன் உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு,
ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை!!
இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?
உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய் - இலவசம் நின்று போனால் உன் நிலை!!
உழைப்பவர் சேமிப்பைக் களவாட தலைப்படுவாய்!!!
இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்
அமைதிப்பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை
தமிழா விழித்திடு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!
நாளைய தமிழகம் நம் கையில்,
உடன்பிறப்பே சிந்திப்பாயா??
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!!