27 Aug 2010

அய்யா கொஞ்சம் தண்ணி குடுங்கையா..??

நண்பர் சங்கவிக்கு இங்க பின்னூட்டம் போட போயி, அது கொஞ்சம் பெருசா போனதால இடுகையாகவே போட்டுட்டேன்.

சங்கவி சொல்லுறது எல்லாம் சரிதான். உங்களுக்கு என்ன(பவானி) இந்தப் பக்கம் காவேரி, அந்தப் பக்கம் பவானினு ஓடுது. கோபில கூட LBP ஓடுது. பொள்ளாச்சி, உடுமலைப் பக்கம் சொல்லவே வேணாம். திருப்பூர்ல நொய்யல் இருந்துச்சு, அதுவும் இப்போ நோயால் வாடுது. ஆனா எங்க நிலமைய யோசிச்சு பார்த்திங்களா..?


திருப்பூருக்கு வடக்க, குன்னத்தூர், கொளப்பலூர் தாண்டி கோபிக்கு ஏழு கிலோமீட்டர் முன்னாடி வரைக்கும் வானம் பார்த்த பூமிதான். அதே மாதிரி மேக்க புளியம்பட்டில இருந்து நம்பியூர், செவியூர், திங்களூர் வரைக்கும் இதே நிலைமைதான். இத்தனைக்கும் வடக்கத்துக்காரங்கள(தோள்ல பச்ச துண்ட போட்டுக்கிட்டு டீஸல் புல்லட் ஒட்டுறதுதான் அவங்க வேல) விட நாங்க கடுமையான உழைப்பாளிகள் தான்.

நாங்களும் விடாம பதினஞ்சு இருபது வருசமா அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக நடையா நடக்கிறோம். ஆனா அறிவிப்பு மட்டும் வருது செயல்ல ஒன்னையும் காணோம். இதோ இப்போ கூட செம்மொழி மாநாட்டுல அறிவிப்பாங்கனு வாய தொறந்து பார்த்துட்டு இருந்ததுதான் மிச்சம்.

இத்தனைக்கும் நாங்க ஒன்னும் புது வாய்க்காலோ, ஆத்த திருப்பி விடச் சொல்லியோ கேட்கல. இருக்குற பள்ள வாரியத்த தூர் வாரி குளம் குட்டைகளுக்கு தண்ணி விட்டா மட்டும் போதும். கிணறு, போர்வெல் எல்லாம் பதம் புடிச்சுக்கும். இப்போ 1500 அடில கூட தண்ணி இருக்காது போல. போன மாசம் எங்க பக்கத்து தோட்டத்துல 1300 ல ஒன்னு 1400 ல ஒண்ணுனு ரண்டு போர் போட்டு அஞ்சு லட்ச ரூபா போனது தான் மிச்சம். இத்தன வருஷம் கழிச்சு மஞ்சள் நல்ல விலைக்கு வித்து, அந்த காச கொண்டு போயி குழில போட்டாச்சு. இதுக்கு மேல என்ன பண்ண?

இந்த கருமத்த நம்பி ஒன்னும் பண்ண முடியாதுன்னு பாதி பேரு திருப்பூர் கம்பனிக்காரங்களுக்கு காட்ட வித்து போட்டு அதே கம்பனில கூலி வேலைக்கு போயிட்டு இருக்காங்க. சொன்ன நம்ப மாட்டிங்க, எங்க பங்காளி ஒருத்தரு தோட்டத்த வித்து போட்டு என்ன பண்ணறதுன்னு சொல்லிட்டு கம்பெனிக்கு விக்காம அதுல விவசாயம் பார்த்தாரு. ஒரே வருசத்துல கெணரும் காஞ்சு, குழியும் வத்திப் போச்சு. இப்போ அதே கம்பெனிக்கு கணக்கு எழுத போறாரு(நல்ல வேல பி.யு.சி. வரைக்கும் படிச்சு இருந்தாரு)

விவசாயம் பண்ணி பொழச்சுக்கலாம்னு படிக்காம, இந்த காட்டையே நம்பினவுங்க எல்லாம் வேற வழியே இல்லாம கூலி வேலைக்குதான் போயிட்டு இருக்காங்க. இலவச மின்சாரம் வாங்குற போராட்டத்துல மூணு பேரு செத்து போனாங்களே(இப்போ அரசியல் பண்ணுறதுக்கு உதவுறாங்க) ஞாபகம் இருக்கா? அதுல ஒருத்தரு எனக்கு தாத்தா முறை. அவரோட தோட்டமும் இந்த காஞ்சு போன பகுதிக்குள்ள தான் வருது. அவருக்கு(மத்த ரண்டு பேருக்கும் தான்) நன்றி செலுத்த வேண்டியாவது இந்த அவினாசி - அத்திக்கடவு திட்டத்த நிறைவேத்தலாம்.

ஆனா அவங்க இறந்த நாள் அன்னைக்கு பெருமானல்லூர்ல பெருசா ஒரு ப்ளெக்ஸ் வெச்சு அதுல சிறுசா அவங்க போட்டோவும், பேரும் மட்டும்(மத்ததெல்லாம் என்னான்னு கேட்கறிங்களா..??) இந்த ரண்டு வருசமா வெக்கறாங்க. கேட்டா கொங்கு நாட்ட தூக்கி நிறுத்தப் போறேன்னு சொல்றாங்க..??

இப்படி விவசாயம் பண்ண திறமை இருந்தும், ஆர்வம் இருந்தும் வேற வழி இல்லாம(ஆனா, வலி இருக்கு..) திருப்பூர் கம்பெனிக்கும், வீட்டு மனைக்கும் காடு தோட்டத்த வித்துட்டு இருக்கோம். இதுவரைக்கும் யாராவது எங்களுக்காக கவலைப்பட்டு இருக்கிங்களா?? ஆனா, நாங்க காட்ட வித்து போடறோம்னு மட்டும் வருத்தப்படுறிங்க. எங்களுக்கான வசதிகள் இருந்தும் நாங்க விவசாயம் செய்ய மறுத்தா, செருப்ப கழட்டி அடிங்க. ஆனா ஒண்ணுமே இல்லாம வெறும் கைல மொழம் போட எங்களால முடியாதுங்க.

12 Aug 2010

யாருக்காவது ராமாயணம் தெரியுமா..??

பள்ளிக்கூடத்துல படிக்கும் போது யாரோ சொன்ன கதை..

ஒரு  முனிவர் ஒருத்தரு வழில போயிட்டு இருக்கும்போது, எதுக்கால இன்னொரு முனிவரு கால இழுத்துகிட்டே வந்தாராம். ஏப்பா என்ன ஆச்சுன்னு இவரு கேட்க,

    "முக்காலைகொண்டு மூவிரண்டைக் கடக்கயிலே ஐந்து தலை நாகமொன்று ஆளக் கடந்ததுவே.." அப்படின்னாராம்.


அதுக்கு இவரு,
    "பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலை வாங்கித் தேய்.." அப்படின்னு சொன்னாராம்.

இதுக்கு என்ன விளக்கம்னா..??

முதலாமவர்: வயதாகிவிட்டதால் கையில் குச்சியுடன் ஆற்றைக் கடந்து வரும்போது நெருஞ்சி முள் ஒன்று காலில் குத்தி விட்டதாம்..

இரண்டாமவர்:
பத்து தரன் - தசரதன்
புத்திரன் - மகன் (ராமன்)
மித்திரனின் - நண்பன்(ராமனின் நண்பன் சுக்ரீவன்)
சத்துருவின் - எதிரி(சுக்ரீவனின் எதிரி வாலி)
பத்தினியின் - மனைவி(வாலியின் மனைவி தாரை)
தாரைல காலை வாங்கினா தரை (ஸ்ஸ்ஸ்ஸப்பா....)

ஒன்னுமில்லைங்க தரைல காலத் தேய்னு சொல்லுறாரு..

இத எழுதும்போது ராமனின் நண்பன் சுக்ரீவனா? வாலியா? னு சந்தேகம் வந்துச்சு. சரின்னு  கூகுள்ல தேடித் பார்த்தா, ஏற்கனவே ஒரு நண்பர் இங்க இதப் பத்தி இடுகை போட்டு இருக்கார். இருந்தாலும் நாம முன்ன வெச்ச கால பின்னாடி வெக்கக் கூடாதுன்னு நானும் இந்த இடுகைய போட்டுட்டேன்..

11 Aug 2010

அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா தேவையா(ஒரு கண்ணீர் கதை)..??

சில வாரங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு தலைப்பு "அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா அவசியமா?". அப்படி ஒரு வசதி என்னோட அலுவலகத்துல இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்னு எனக்கு இப்போ தோணுது.

ஒரு வெள்ளிக்கிழமை என்னோட கணினியை நிறுத்திட்டு போன நான், திங்கள்கிழமை வந்து பட்டன அமுக்கினா, குய் குய் னு மூணு சத்தம் வந்துச்சு. நானும் நாலஞ்சு தடவ முயற்சி செஞ்சு பார்த்துட்டு, பழுது நீக்குரவங்களுக்கு தகவல் சொன்னேன். ஒருத்தர் வந்து பார்த்துட்டு இது மென்பொருள் பிரச்சினை இல்ல, வன்பொருள் சரி செய்யுறவர கூப்பிட்டு கேளுங்கன்னு சொன்னாரு. அவரு வந்து பார்த்துட்டு தம்பி RAM  எங்கப்பான்னு கேட்டாரு.. "இந்திராகாந்திய சுட்டுட்டாங்களாங்கற" ரேஞ்சுக்கு என்னது RAM அ காணோமான்னு கேட்டேன்.

ஆமாப்பா ன்னு சொன்னாரு. சரி நான் இப்போ என்னங்க பண்ணனும்னு கேட்டதுக்கு, ஸ்டோர்ல போயி கேளுப்பான்னு சொன்னாரு. அங்க போயி கேட்டா, இது ஸ்டோர் மட்டும்தான். நாங்க RAM எல்லாம் தரமாட்டோம். Access Control  க்கும், செக்யூரிட்டிக்கும் சொல்லிட்டு உங்க மேனேஜருக்கு ஒரு மெயில் அனுப்புனு பதில் வந்துச்சு. அவருக்கு மெயில் அனுப்பினா, செக்யூரிட்டி கிட்ட இருந்து ஒரு மெயில் வாங்கி அனுப்ப சொன்னாரு.

எல்லாம் மெய்லும் அனுப்பி அவரு கம்பெனி கிட்ட RAM கேட்டு ஒரு விண்ணப்பம் போட்டாரு. அதுக்கு அந்த தம்பி கிட்ட ரண்டு கம்ப்யூட்டர் இருக்கு, அதுல ஒன்ன ஸ்டோர்ல திருப்பி தரச் சொல்லுங்கன்னு ஒரு பதில் வந்துது. ஒரு கம்ப்யூட்டர்க்கே வேலைய காணோமாம்னு நினச்சுட்டு இருங்க பார்த்து சொல்லறேன்னு சொன்னேன்.

அப்புறம் பார்த்தா அத நான் திருப்பி கொடுத்து ஒரு வருசத்துக்கும் மேல ஆகி இருந்தது.  அய்யா அத நான் திருப்பி கொடுத்து ஒரு வருசமாச்சுன்னு சொல்லி, அங்க இங்க பேசி ஒருவழியா புது RAM வாங்கறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்குதே, அத சொல்லி மாள முடியாதுங்க.

இப்போ விசயத்துக்கு வர்றேன். கண்காணிப்பு கேமரா இருந்துருந்தா, செக்யூரிட்டியோட என்னோட வேலை முடிஞ்சுருக்கும். இத்தன துன்பம் இருந்துருக்காது. இத்தன துன்பத்துலயும் ஒரு மகிழ்ச்சி என்னன்னா எப்படியோ ஒரு இடுகை தேத்தியாச்சு. :-))

எங்க ஊர்காரங்க..