12 Jan 2011

தொடர்புக்கு..

2010 இறுதியில் இணையப் பக்கம் வர முடியாத அளவுக்கு ஆணிகள் மற்றும் அலுவலகத்தில் ஏக கட்டுப்பாடு. இதில் ஈரோடு சங்கமமும் தவறிப் போனதில் நிறைய வருத்தம். நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்த நண்பர்களுக்கு வாழ்த்துகள். 2011  இனிமையாக பிறந்துள்ளது. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கிட்டத்தட்ட இரண்டு மாசமா படிக்காமல் இருந்த பதிவுகளை ஓரளவுக்கு படிச்சாச்சு. வருஷம் பொறந்து பன்னண்டு நாளாகியும் இன்னும் கணக்கு தொடங்கவே இல்லையேனு ஒரே வெசனம். அதுதான் இந்த இடுகை. மத்தபடிக்கு வேற ஒன்னும் முக்கிமான விசயம் இல்லைங்க.

போதும் போதும்ங்கற அளவுக்கு நல்ல மழை. ஊர்ல இந்த வருஷம் கடலை ஓரளவுக்கு நல்ல விளைச்சல். மஞ்ச வெள்ளாமையும், வெலையும் நல்லாருக்கு. சோளத்தட்டு, கடலைகொடி எல்லாம் கொண்டுவந்து போர் போட்டாச்சு. தோட்டத்துல தண்ணி வந்தவுங்க எல்லாம் தோட்டத்து கடலைமு , போத்தாலைமு வெச்சாச்சு. வழக்கம் போலவே இந்த வருசமும் கூலி ஏறிப்போச்சு.

பக்கத்தூரு மாரியாத்தா கோயில்ல எல்லாம் கம்பம் போட்டு ஆட்டம் போட்டு முடுச்சுட்டாங்க. இனி வரிசையா தேர் நோம்பி வருது. கோபி, பாரியூர் அம்மன் தேரு வர்ற வியாழன் பூமிதி விழா, வெள்ளி தேரோட்டம், சனிக்கெழம முத்துப்பல்லாக்கு. அதே மாதிரி வெள்ளிக்கெழம காப்பு கட்டு நோம்பி, சனிக்கெழம பொங்கல் வருது. அதுக்கப்பறம் தை பூச தேரு, அப்புறம் உள்ளூரு அம்மன் தேருனு இந்த மாசமே ஒரே நோம்பிதான்.

ஊர் விழாக்களை நிழற்படங்களோடு பகிந்து கொள்கிறேன்.. 

25 Oct 2010

உன்னதமான உறவுகள்

இருவேறு மின்னஞ்சல் இருவேறு கணவர்கள்..


மின்னஞ்சல்: 1

ஒரு இளம்பெண்ணின் நினைவலையில்,

நான் சின்னப் பெண்ணாக இருக்கும் போது எனது அம்மா இரவு உணவுக்காக எப்போதும் காலை நேரம் செய்யப்படும் எளிய உணவுகளையே சமைப்பாள். அன்றொரு இரவு மிக கடுமையான பல வேலைகளுக்கு பிறகு இதேபோல் ஒரு காலை உணவை தயார் செய்தாள். அன்றைய இரவு உணவாக முட்டையுடன் கொஞ்சம் அதிகமாக வறுக்கப்பட்ட ரொட்டியை அப்பாவுக்காக வைத்திருந்தார். என் தந்தை கோவப்படுவாரோ என்று நான் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

ஆனால், என் தந்தை என்ன செய்தாரென்றால் அம்மாவைப் பார்த்து புன்னகைத்து விட்டு, எனது அன்றைய நாளின் பள்ளி அனுபவத்தைக் கேட்டுக் கொண்டே சாப்பிடத் தொடங்கினார். நான் அவரிடம் என்ன சொன்னேன் என்பது சரியாக ஞாபகம் இல்லை. ஆனால், அவர் ஜாம் தடவிக்கொண்டே அந்த ரொட்டியை சாப்பிட்டது மட்டும் நன்றாக நினைவில் உள்ளது. நான் அந்த இடத்தைவிட்டு செல்லும் போது என் அம்மா ரொட்டி தீய்ந்து போனதற்காக அப்பாவிடம் மன்னிப்பு கேட்டது காதில் விழுந்தது. "அதனாலென்ன, எனக்கு அதிகமாக வறுபட்ட ரொட்டி ரொம்ப பிடிக்கும்" என்று அப்பா சொன்னதை என்னால் மறக்கவே முடியாது.

அன்றிரவு படுக்கையில் அப்பாவின் மேல் அமர்ந்து கொண்டு, உண்மையிலேயே உங்களுக்கு தீய்ந்து போன ரொட்டி பிடிக்குமா என்று கேட்டேன். என்னை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டே சொன்னார், "நாள் முழுவதும் செய்த கடின வேலைகளால் உன் அம்மா மிகவும் களைப்பாக இருந்தாள். மேலும் ரொட்டி கொஞ்சம் தீய்ந்து போனால் ஒன்றும் குறைத்து விடாது". உனக்கு ஒரு விசயம் தெரியுமா, "வாழ்க்கையில் எல்லாமே ஒழுங்கில்லாத பொருள்கள், ஒழுங்கில்லாத மனிதர்கள் தான்..".

இதுவரையில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், மற்றவர்களின் தவறை ஏற்றுக் கொள்வதுதான். அடுத்தவர்களை மாற்றுக்கருத்தை ஏற்றுக் கொள்ளவோ பாராட்டவோ செய்வது உறவுகளை பலப்படுத்த வளர்க்க உதவும். காய்ந்த ரொட்டி உறவுக்கு ஒரு பெரிய தடைக்கல்லாக அமைந்து விடாது. உறவுகளை சரியாக புரிந்து கொள்வதே கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தை நெருக்கத்தை, நட்பை உருவாக்கும்.

உங்களது மகிழ்ச்சியின் திறவுகோலை அடுத்தவர் கையில் கொடுக்காதீர்கள். அது உங்களிடமே இருக்கட்டும். உங்களை சுற்றி உள்ளவர்கள் எப்போதும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை மறந்து விடுவார்கள், நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதையும் மறந்து விடுவார்கள். ஆனால், உங்களால் உணரப்பட்ட ஒன்றை என்றும் மறக்க முடியாது.


மின்னஞ்சல்: 2

ஒரு கணவன், மனைவி ஜெருசலம் சுற்றுலா சென்ற போது எதிர்பாரா விதமாக மனைவி இறந்து விட்டார். மனைவி உடலை ஊருக்கு கொண்டுசெல்ல 50000 ரூபாயும், அங்கேயே சடங்குகளை முடிக்க 1500 ரூபாயும் செலவாகும் என்று அறிந்த கணவர் ஊருக்கே கொண்டுசெல்ல முடிவு செய்தார். எதற்காக தேவையில்லாமல் 50000 ரூபாய் செலவு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்னார். "ரொம்ப நாள் முன்பு ஜீசுஸ் கிறிஸ்ட் என்பவர் இங்கே இறந்து, அவரது உடலை எரித்து மூன்று நாட்களுக்கு பிறகு உயிர் பிழைத்து விட்டாராம். நான் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை..!!".

16 Sept 2010

கோப்பையா? காபியா?

எனக்கு மின்னசலில் பகிரப்பட்ட ஒரு வாழ்க்கை தகவல்(தத்துவம்!).

நல்ல வேலை கிடைத்து வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்திருந்த மாணவர்கள் சிலர் தங்களது கல்லூரி பேராசிரியரைச் சந்தித்தனர். பழைய கதைகளைப் பேசிக் கொண்டுருந்த அவர்களின் பேச்சு தங்கள் சார்ந்திருந்த வேலையினால் உண்டாகும் மன அழுத்தத்தையும் அதனால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சலிப்பையும் பற்றி திரும்பியது.

விருந்தினர்களை உபசரிக்க காபி எடுத்துவரச் சென்றார் பேராசிரியர். ஒரு பெரிய பாத்திரத்தில் காபியும் சில கோப்பைகளையும் எடுத்துவந்தார். அதில் கிளாஸ், பிளாஸ்டிக், கிரிஸ்டல், விலையுயர்ந்த, சாதாரணமான, வெள்ளி மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட கோப்பைகள் கலந்து கிடந்தன. ஆளுக்கொரு கோப்பையில் காபியை அவர்களே எடுத்துக்கொள்ளுமாறு பேராசிரியர் பணிந்தார்.

மாணவர்கள் காபியுடன் அமர்ந்ததும், பேராசிரியர் பேச ஆரம்பித்தார்.

நன்றாக கவனித்தீர்களானால், விலையுயர்ந்த மற்றும் பார்வைக்கு அழகான கோப்பைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ளவை சாதாரண மலிவாக கிடைக்கக் கூடிய கோப்பைகள் மட்டுமே. இந்த மனநிலைதான் உங்களின் அனைத்து துன்பம் மற்றும் மன அழுத்ததிற்கு காரணம். உண்மையிலேயே உங்களுக்கு தேவை கோப்பையா? அல்லது காபியா? ஆனால் நீங்கள் அனைவரும் மற்றவர்களின் கோப்பையை விட உங்களது கோப்பை நன்றாக இருக்கவேண்டுமென்று தான் நினைத்தீர்கள்.

இங்கே வாழ்க்கையை காபியாக கருதினால், வேலை, பணம், அந்தஸ்து ஆகியவை கோப்பைகளைப் போன்றது. அந்த கோப்பைகளெல்லாம்  உங்களது வாழ்க்கையை தூக்கி பிடிக்கும். ஆனால் வாழ்க்கை மாறாமல் அப்படியேதான் இருக்கும். கோப்பையை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தால் சிலசமயம் வாழ்க்கையை இழக்க நேரிடும்.

காபி அருந்த கோப்பை அவசியம்தான். அது எந்த கோப்பை என்பது, அவரவர் மனநிலையில் உள்ளது. கோப்பையை தேடி அலையாமல், காபியை மகிழ்வாக அருந்துங்கள்.

நமது கோப்பையை நாம்தான் முடிவு செய்யவேண்டும்.

27 Aug 2010

அய்யா கொஞ்சம் தண்ணி குடுங்கையா..??

நண்பர் சங்கவிக்கு இங்க பின்னூட்டம் போட போயி, அது கொஞ்சம் பெருசா போனதால இடுகையாகவே போட்டுட்டேன்.

சங்கவி சொல்லுறது எல்லாம் சரிதான். உங்களுக்கு என்ன(பவானி) இந்தப் பக்கம் காவேரி, அந்தப் பக்கம் பவானினு ஓடுது. கோபில கூட LBP ஓடுது. பொள்ளாச்சி, உடுமலைப் பக்கம் சொல்லவே வேணாம். திருப்பூர்ல நொய்யல் இருந்துச்சு, அதுவும் இப்போ நோயால் வாடுது. ஆனா எங்க நிலமைய யோசிச்சு பார்த்திங்களா..?


திருப்பூருக்கு வடக்க, குன்னத்தூர், கொளப்பலூர் தாண்டி கோபிக்கு ஏழு கிலோமீட்டர் முன்னாடி வரைக்கும் வானம் பார்த்த பூமிதான். அதே மாதிரி மேக்க புளியம்பட்டில இருந்து நம்பியூர், செவியூர், திங்களூர் வரைக்கும் இதே நிலைமைதான். இத்தனைக்கும் வடக்கத்துக்காரங்கள(தோள்ல பச்ச துண்ட போட்டுக்கிட்டு டீஸல் புல்லட் ஒட்டுறதுதான் அவங்க வேல) விட நாங்க கடுமையான உழைப்பாளிகள் தான்.

நாங்களும் விடாம பதினஞ்சு இருபது வருசமா அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக நடையா நடக்கிறோம். ஆனா அறிவிப்பு மட்டும் வருது செயல்ல ஒன்னையும் காணோம். இதோ இப்போ கூட செம்மொழி மாநாட்டுல அறிவிப்பாங்கனு வாய தொறந்து பார்த்துட்டு இருந்ததுதான் மிச்சம்.

இத்தனைக்கும் நாங்க ஒன்னும் புது வாய்க்காலோ, ஆத்த திருப்பி விடச் சொல்லியோ கேட்கல. இருக்குற பள்ள வாரியத்த தூர் வாரி குளம் குட்டைகளுக்கு தண்ணி விட்டா மட்டும் போதும். கிணறு, போர்வெல் எல்லாம் பதம் புடிச்சுக்கும். இப்போ 1500 அடில கூட தண்ணி இருக்காது போல. போன மாசம் எங்க பக்கத்து தோட்டத்துல 1300 ல ஒன்னு 1400 ல ஒண்ணுனு ரண்டு போர் போட்டு அஞ்சு லட்ச ரூபா போனது தான் மிச்சம். இத்தன வருஷம் கழிச்சு மஞ்சள் நல்ல விலைக்கு வித்து, அந்த காச கொண்டு போயி குழில போட்டாச்சு. இதுக்கு மேல என்ன பண்ண?

இந்த கருமத்த நம்பி ஒன்னும் பண்ண முடியாதுன்னு பாதி பேரு திருப்பூர் கம்பனிக்காரங்களுக்கு காட்ட வித்து போட்டு அதே கம்பனில கூலி வேலைக்கு போயிட்டு இருக்காங்க. சொன்ன நம்ப மாட்டிங்க, எங்க பங்காளி ஒருத்தரு தோட்டத்த வித்து போட்டு என்ன பண்ணறதுன்னு சொல்லிட்டு கம்பெனிக்கு விக்காம அதுல விவசாயம் பார்த்தாரு. ஒரே வருசத்துல கெணரும் காஞ்சு, குழியும் வத்திப் போச்சு. இப்போ அதே கம்பெனிக்கு கணக்கு எழுத போறாரு(நல்ல வேல பி.யு.சி. வரைக்கும் படிச்சு இருந்தாரு)

விவசாயம் பண்ணி பொழச்சுக்கலாம்னு படிக்காம, இந்த காட்டையே நம்பினவுங்க எல்லாம் வேற வழியே இல்லாம கூலி வேலைக்குதான் போயிட்டு இருக்காங்க. இலவச மின்சாரம் வாங்குற போராட்டத்துல மூணு பேரு செத்து போனாங்களே(இப்போ அரசியல் பண்ணுறதுக்கு உதவுறாங்க) ஞாபகம் இருக்கா? அதுல ஒருத்தரு எனக்கு தாத்தா முறை. அவரோட தோட்டமும் இந்த காஞ்சு போன பகுதிக்குள்ள தான் வருது. அவருக்கு(மத்த ரண்டு பேருக்கும் தான்) நன்றி செலுத்த வேண்டியாவது இந்த அவினாசி - அத்திக்கடவு திட்டத்த நிறைவேத்தலாம்.

ஆனா அவங்க இறந்த நாள் அன்னைக்கு பெருமானல்லூர்ல பெருசா ஒரு ப்ளெக்ஸ் வெச்சு அதுல சிறுசா அவங்க போட்டோவும், பேரும் மட்டும்(மத்ததெல்லாம் என்னான்னு கேட்கறிங்களா..??) இந்த ரண்டு வருசமா வெக்கறாங்க. கேட்டா கொங்கு நாட்ட தூக்கி நிறுத்தப் போறேன்னு சொல்றாங்க..??

இப்படி விவசாயம் பண்ண திறமை இருந்தும், ஆர்வம் இருந்தும் வேற வழி இல்லாம(ஆனா, வலி இருக்கு..) திருப்பூர் கம்பெனிக்கும், வீட்டு மனைக்கும் காடு தோட்டத்த வித்துட்டு இருக்கோம். இதுவரைக்கும் யாராவது எங்களுக்காக கவலைப்பட்டு இருக்கிங்களா?? ஆனா, நாங்க காட்ட வித்து போடறோம்னு மட்டும் வருத்தப்படுறிங்க. எங்களுக்கான வசதிகள் இருந்தும் நாங்க விவசாயம் செய்ய மறுத்தா, செருப்ப கழட்டி அடிங்க. ஆனா ஒண்ணுமே இல்லாம வெறும் கைல மொழம் போட எங்களால முடியாதுங்க.

12 Aug 2010

யாருக்காவது ராமாயணம் தெரியுமா..??

பள்ளிக்கூடத்துல படிக்கும் போது யாரோ சொன்ன கதை..

ஒரு  முனிவர் ஒருத்தரு வழில போயிட்டு இருக்கும்போது, எதுக்கால இன்னொரு முனிவரு கால இழுத்துகிட்டே வந்தாராம். ஏப்பா என்ன ஆச்சுன்னு இவரு கேட்க,

    "முக்காலைகொண்டு மூவிரண்டைக் கடக்கயிலே ஐந்து தலை நாகமொன்று ஆளக் கடந்ததுவே.." அப்படின்னாராம்.


அதுக்கு இவரு,
    "பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலை வாங்கித் தேய்.." அப்படின்னு சொன்னாராம்.

இதுக்கு என்ன விளக்கம்னா..??

முதலாமவர்: வயதாகிவிட்டதால் கையில் குச்சியுடன் ஆற்றைக் கடந்து வரும்போது நெருஞ்சி முள் ஒன்று காலில் குத்தி விட்டதாம்..

இரண்டாமவர்:
பத்து தரன் - தசரதன்
புத்திரன் - மகன் (ராமன்)
மித்திரனின் - நண்பன்(ராமனின் நண்பன் சுக்ரீவன்)
சத்துருவின் - எதிரி(சுக்ரீவனின் எதிரி வாலி)
பத்தினியின் - மனைவி(வாலியின் மனைவி தாரை)
தாரைல காலை வாங்கினா தரை (ஸ்ஸ்ஸ்ஸப்பா....)

ஒன்னுமில்லைங்க தரைல காலத் தேய்னு சொல்லுறாரு..

இத எழுதும்போது ராமனின் நண்பன் சுக்ரீவனா? வாலியா? னு சந்தேகம் வந்துச்சு. சரின்னு  கூகுள்ல தேடித் பார்த்தா, ஏற்கனவே ஒரு நண்பர் இங்க இதப் பத்தி இடுகை போட்டு இருக்கார். இருந்தாலும் நாம முன்ன வெச்ச கால பின்னாடி வெக்கக் கூடாதுன்னு நானும் இந்த இடுகைய போட்டுட்டேன்..

11 Aug 2010

அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா தேவையா(ஒரு கண்ணீர் கதை)..??

சில வாரங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு தலைப்பு "அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா அவசியமா?". அப்படி ஒரு வசதி என்னோட அலுவலகத்துல இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்னு எனக்கு இப்போ தோணுது.

ஒரு வெள்ளிக்கிழமை என்னோட கணினியை நிறுத்திட்டு போன நான், திங்கள்கிழமை வந்து பட்டன அமுக்கினா, குய் குய் னு மூணு சத்தம் வந்துச்சு. நானும் நாலஞ்சு தடவ முயற்சி செஞ்சு பார்த்துட்டு, பழுது நீக்குரவங்களுக்கு தகவல் சொன்னேன். ஒருத்தர் வந்து பார்த்துட்டு இது மென்பொருள் பிரச்சினை இல்ல, வன்பொருள் சரி செய்யுறவர கூப்பிட்டு கேளுங்கன்னு சொன்னாரு. அவரு வந்து பார்த்துட்டு தம்பி RAM  எங்கப்பான்னு கேட்டாரு.. "இந்திராகாந்திய சுட்டுட்டாங்களாங்கற" ரேஞ்சுக்கு என்னது RAM அ காணோமான்னு கேட்டேன்.

ஆமாப்பா ன்னு சொன்னாரு. சரி நான் இப்போ என்னங்க பண்ணனும்னு கேட்டதுக்கு, ஸ்டோர்ல போயி கேளுப்பான்னு சொன்னாரு. அங்க போயி கேட்டா, இது ஸ்டோர் மட்டும்தான். நாங்க RAM எல்லாம் தரமாட்டோம். Access Control  க்கும், செக்யூரிட்டிக்கும் சொல்லிட்டு உங்க மேனேஜருக்கு ஒரு மெயில் அனுப்புனு பதில் வந்துச்சு. அவருக்கு மெயில் அனுப்பினா, செக்யூரிட்டி கிட்ட இருந்து ஒரு மெயில் வாங்கி அனுப்ப சொன்னாரு.

எல்லாம் மெய்லும் அனுப்பி அவரு கம்பெனி கிட்ட RAM கேட்டு ஒரு விண்ணப்பம் போட்டாரு. அதுக்கு அந்த தம்பி கிட்ட ரண்டு கம்ப்யூட்டர் இருக்கு, அதுல ஒன்ன ஸ்டோர்ல திருப்பி தரச் சொல்லுங்கன்னு ஒரு பதில் வந்துது. ஒரு கம்ப்யூட்டர்க்கே வேலைய காணோமாம்னு நினச்சுட்டு இருங்க பார்த்து சொல்லறேன்னு சொன்னேன்.

அப்புறம் பார்த்தா அத நான் திருப்பி கொடுத்து ஒரு வருசத்துக்கும் மேல ஆகி இருந்தது.  அய்யா அத நான் திருப்பி கொடுத்து ஒரு வருசமாச்சுன்னு சொல்லி, அங்க இங்க பேசி ஒருவழியா புது RAM வாங்கறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்குதே, அத சொல்லி மாள முடியாதுங்க.

இப்போ விசயத்துக்கு வர்றேன். கண்காணிப்பு கேமரா இருந்துருந்தா, செக்யூரிட்டியோட என்னோட வேலை முடிஞ்சுருக்கும். இத்தன துன்பம் இருந்துருக்காது. இத்தன துன்பத்துலயும் ஒரு மகிழ்ச்சி என்னன்னா எப்படியோ ஒரு இடுகை தேத்தியாச்சு. :-))

28 Jul 2010

சவாலை சமாளிக்க..

ஒரு  பெரிய மாற்றத்தை உருவாக்கும் சின்ன கதை. எனக்கு மின்னஞ்சலில் பகிரப்பட்ட ஒரு உற்சாக கதை.

கல்லூரி பேராசிரியர் ஒருவரது வகுப்பில்
பேராசிரியர் தனது கையில் கொஞ்சம் நீருடன் ஒரு கோப்பையை வைத்துள்ளார். மாணவர்கள் அனைவருக்கும் தெரியுமாறு தூக்கி பிடித்துக் கொண்டு, "இந்த கோப்பையில் உள்ள நீரின் அளவு என்ன?" என்று கேட்கிறார்.

50  மில்லி, 75  மில்லி, 100  மில்லி என பலவிதமான பதில்கள்.

Glass

 "இருக்கட்டும் எனக்கு இதன் அளவு முக்கியம் அல்ல" என்று கூறியவர், "நான் சொல்ல விரும்பும் விசயம், ஒரு சில நிமிடங்களுக்கு நான் இதை தூக்கி பிடித்திருந்ததால் என்னவாகும்?"
"ஒன்னும் ஆகாது".

"இதையே ஒருமணி நேரம் பிடித்திருந்தால்?"
"உங்க கை வலி எடுக்கும்" என்றனர் மாணவர்கள்.

"மிகவும் சரி, இதையே நாள் முழுவதும் வைத்திருந்தால்..??
"உங்களது கை அப்படியே மடங்கி விடும், தசை வலி ஏற்படுவதோடு பாரலிசிஸ் நோய்க்கும் ஆளாக நேரிடும்" என்று ஒரு மாணவன் சொல்ல மற்றவர்களும் ஆமோதித்தனர்..

"சரிஇந்த நேரத்தில் கோப்பையில்  உள்ள நீரின் அளவில் மாற்றம் ஏதுமிருக்குமா?" என்று கேட்டார்.
இருக்காது"..

"அப்படியானால்  எனது தசை வழிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?"
மாணவர்கள் புரியாமல் பார்க்க, அவரே தொடர்ந்தார்..

"இப்போது இந்த வலியில் இருந்து மீள நான் என்ன செய்ய வேண்டும்?"
"அந்த கோப்பையை கீழ வைத்து விடுங்க.." என்றான் ஒரு மாணவன்.
"இதைத்தான் எதிர்பார்த்தேன்..!"

வாழ்க்கையில் பிரச்சனை என்பது இந்த கோப்பையில் உள்ள நீரைப் போலத்தான்.கொஞ்சநேரம் அதைப் பற்றி சிந்திப்பது தேவைதான்.

ஆனால் அதைப் பற்றியே நீண்ட நேரம் சிந்திப்பது தலைவலியை கொடுக்கும்.மேலும் அதைப் பற்றியே சிந்திப்பது, பாரலிசிஸ்யை கொண்டு வரும்.
அதற்கு மேல் நம்மால் ஏதும் செய்ய இயலாது.

வாழ்க்கையில் உள்ள தடைகளையும், பிரச்சனைகளையும் சிந்திப்பது மிகவும் அவசியம். ஆனால், அதைவிட முக்கியமானது நாள் முடிவில் தூங்கச் செல்லும் முன் அவற்றை தூக்கி எறிவது.

இதனால், அடுத்த நாள் சுறுசுறுப்பாக எழுந்து, நமது தடைகளை தகர்க்க முடியும். 
எனவே அலுவலகத்தில் இருந்து செல்லும் போது,
பிரச்சனை என்கிற கோப்பையை தூக்கி எறிந்து விட்டு செல்லுங்கள்..


Glass

எங்க ஊர்காரங்க..